16/12/2012

காதலிக்கிறேன்

கண்கள் படபடக்கவில்லை
இதயம் தடதடக்கவில்லை
கால்களுக்குக் கீழ் ஆகாயமுமில்லை

அவளை நினைக்க மறந்ததும் உண்டு
அவளை பார்க்க மறுத்ததும் உண்டு
அவள் குரலை கேட்க வெறுத்ததும் உண்டு

காதல் கடிதம் எழுதியதில்லை
காதற் பரிசு கொடுத்ததுமில்லை
காதலிக்காக அழுததும் இல்லை

ஆனாலும் காதலிக்கிறேன்
ஆனாலும் அவளை காதலிக்கிறேன்
ஆனாலும் நான் அவளை காதலிக்கிறேன்.

31/10/2012

இல்லை.

* என்ன செய்தோம்?
   எதற்கு வாழ்கிறோம்?

* கேள்விகளுக்கு இன்று வரை
   விடையில்லை.

 * உணர்ச்சிகளை என்றோ
   அடகு வைக்கவில்லை
   மொத்தமாய் விற்று விட்டோம்.

* வாரி வழங்குகிறோம்
   வசைகளை மட்டும்.

* இவற்றிற் கிடையில் எட்டணா
   போடும் பெருங்கொடையாளியை
   குனிந்து மனமார வணங்கினாள்
   மவுன்ட் ரோட்டில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரி.

25/09/2012

உன் புராணம் - 2

* புரிந்தது எனக்கு
   காதல் புரியாது என.

* நீ கோவிலை சுற்றினாய்
    நானோ!? உன்னை.

*  உன் கொலுசுகளுக்கு ஏன் இந்த மகிழ்ச்சி?
    உன்னுடனேயே இருப்பதாலோ!!!

* வஞ்சம் வைத்துள்ளேன்
   உன் புத்தகங்கள் மீது
   என்னை பற்ற வேண்டிய கரங்கள்
   அவைகளை பற்றியிருப்பதால்.

* உன்னைப் பற்றி தொடர்ந்து எழுதியதால்
   கவிதைக்கும் உன்மீது காதல்.

* என் கனவில் நீ வருவதன்
   சூட்சமம் என்ன?
   நானும் கடைபிடிக்க வேண்டும்
   அதே சூட்சமத்தை.

* நான் எழுதும் இந்த பேனா இவ்வரிகளை
   உனக்காக dedicate செய்வதாக கொஞ்சுகிறது.

* ரதியிடம் மன்மதனை விலக்கி வைக்கச்
   சொல்லியிருக்கிறேன்! அவன் என்னை
   தனிமையில் தவிக்க விட்டுள்ளதால்...

* இந்திரனை சிறையிட்டு விட்டேன்
   முன்னெச்சரிக்கையாய்...
   இருந்தும் இரவில் நடமாடாதே.
   எனக்கு சோமனைப் பற்றி நன்கு தெரியும்.
   அவன் இன்னும் பாக்கி.

* சக்தி உக்கிரத்தில் இருக்கிறாள்
   சிவன் உன் பின்னால் வந்ததால்.

* கங்கையில் இறங்கி விடாதே,
   அவளுக்கு உன்மேல் தனிக்கோபம்.

திருமகள் திருமாளின் இதயத்தை
   கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறாள், பயத்தில்.

என்னுள் பயம் தீவிரமடைகிறது
   கடவுள்களும் போட்டிக்கு வந்துள்ளதால்...

* இருப்பினும்,
   நான் உனக்காக பிறந்தவன் அல்லவோ!
  போட்டிகள் என்னைத் தளர்த்தி விடுமா என்ன?
    

உன் புராணம்

* உன்னைப் பற்றி தெரியாமல், ரோஜாக்கள் என்னிடம் தான் தான் அழகு என
அடித்து கூறி நம்பவைக்க முயல்கின்றன.

* உலக அழகி நீதான் என கூறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அது உன்னை சிறுமைபடுதிவிடும்.

* உன் கால் தடங்களை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொன்றும் அத்தனை அழகு.

* நேற்று பெய்த மழையில் முளைத்த என்னை உன்னால் இவ்வாறு எழுதவைக்க முடியுமென்றால், கம்பன் ஒருவேளை இப்பொழுது இருந்திருந்தால்....

* நீதான் இவ்வுலகில் என்னை கட்டுப்படுத்தும் பெரிய சக்தி என்று எண்ணியிருந்தேன். ஆனால், உன்னால் என்னை உன்னை நினைக்காமல் இருக்கச் செய்ய முடியவில்லை.

* என்னை நான் முழுதாக உனக்குக் கொடுத்தது தெரியாமல், தன்னில் பாதியை கொடுத்துவிட்டு தான் தான் காதலில் பெரியவன் என ஈசன் இருமாந்துள்ளான்.

* சொக்கி நிற்காதே என்கிறாய் சிரித்துக்கொண்டே, அது எப்படி முடியும் நீ சிரிக்கையில்!?

* காதல் என்ற ஒன்று இல்லை என நீ கூறுவதை நம்புகிறேன், நான் உன்னை காதலிக்கிறேன் என்று தெரிந்திருந்தும்.

* ஆயுள் முழுவதும் நீ சொல்வதை மறுக்காமல் செய்ய ஆசைப்பட்டும், நீ உன்னை மறக்கச் சொன்னதை செய்ய ஏனோ என்னால் முடியவில்லை.


01/09/2012

நிம்மதி

திருமணம் முடிந்து,

பிரிவை  எண்ணி மகள்

வருந்தி அழும்வரை காத்திருந்து

அழுகிறான் தந்தை,

அத் திருமணத்திற்காக

அவன் பட்ட துயரங்களை நினைத்து,

நிம்மதியுடன்....

அன்றுபோல் இன்று இல்லை.

வயல்வெளிகளில் மக்கள்,

அன்று போலவே இன்றும்

நாற்று நாட்டினர்; களை பறித்தனர்;

அறுவடை செய்தனர்; ஆனால்,

அவர்தம் சிரிப்பு மட்டும்

அன்றுபோல் இன்று இல்லை.

ஏன் கூற மறந்தாய் பாரதி?

கட்டுபாடுகள் நிறைந்த

காவிய யுகத்தில்

ரேணுகை, அகலிகையிடம்

எதிர்பார்க்கா கற்ப்பை,

சுதந்திரம் நிறைந்த

அறிவியல் உலகில்

வாழும் புதுமைப்

பெண்ணிடத்தில் எதிர்பார்க்க

எவ்வித முகாந்திரமும் இல்லையென

ஏன் கூற மறந்தாய் பாரதி?

தொங்கிட்டி


தொங்கிட்டி,

அது காதலியின் காதில்

அழகின் அடையாளமாய்

ரசித்ததில் தொடங்கி,

இன்றைய மாடர்ன் யுவதிகளின்

ஃபேஷன் மோகமாகி

அருவருக்கத் தொடங்கியது வரையான

மாபெரும் காவியத்தை

ஒருநொடியில் கூறவல்லது.

19/08/2012

அந்திக் கிறுக்கல்கள்



*  என்னை போ என்கிறாய்.
     எங்கு சென்றாலும் என்னுடனே வருகிறாய்.


*  என் வாழ்வாய் நீயே என்றாய்.
    இங்கு நானோ நீயே!


*   சினிமா பார்க்கலாம் என்றேன்.
     அதெல்லாம் முடியாது என்றாய்.
     இப்பொழுது எனக்கும் சேர்த்து சினிமா பார்க்கிறாய்.


*  கடற்கரையில் காற்று வாங்க சென்றோம்.
    காற்றோ உன்னை வாங்க கெஞ்சியது.


*  சரியா... என்றேன்.
    ம்ம்... என்றாய்.
    இன்னும் புரியாமல் தவிக்கிறேன் நான்.


*   வீதியில் நடக்கையில் விரல் கோர்க்க       முயன்றேன்....
     சிணுங்கிக்கொண்டே விலக்கினாய்.
     கடைசியில் இதழ் கோர்த்து பிரிந்தாய்,
     யாருமறியாமல்.




10/07/2012

காத்திருப்பேன் இன்னுமொரு நாள்...



* அது ஒரு அந்திப்பொழுது...

* கண்களில் படபடப்பு
  நாசியில் குறுகுறுப்பு

* இரண்டொரு நிமிடம் எனினும்
  யுகங்கள் கடந்த எண்ணம்

* அவள் விரல்களிடையில் ஓய்வை
  விரும்பும் எனது விரல்கள்

* அவள் கால் தடங்களில் எல்லாம்
  கால் பதிக்க துடிக்கும் இதயம்

* மனசுக்குள் மின்சாரம்
  கால்களுக்கு கீழ் ஆகாயம்

* அழகாய் நடந்து வந்தாள்
  ஆனந்தத்தின் எல்லை தந்தாள்

* அவள் பார்வை பட்டதும்
  உணர் விழந்தேன் இயற்கையாய்

* மரத்தின் அடியில்
  மரமாய் நின்றேன்

* கருதியது கூறும் முன்
  கடந்து சென்று விட்டாள்

* கவிதைகள் வடித்தும்
  கவிஞன் ஆகா நான்....
  அவள் பார்வை பட்டும்
  அமரன் ஆகா நான்.....
  காத்திருப்பேன் இன்னுமொரு நாள்
  என் காதலை சொல்ல.

நிழற்குடையில்...



* நிழற்குடையில் நிற்கிறேன்
  நிழலுக்கல்ல; பேருந்திற்கு

* பேருந்துகள் கடந்தன
  பயணிகளை மாற்றிக்கொண்டு

* கடந்து சென்ற பேருந்தில்:
  படியில் பயணம் - நொடியில் மரணம்

* கவனிக்கப்படவில்லை, ஒரு நொடி கூட....

நாம் பெற்ற பரிசு



 வாகனங்களின் இரைச்சல்

 மக்களின் அவசரம்

 வானுயர பறக்கும் புழுதி


 செழித்துக் கொழிக்கும் மாசுபாடு

 இன்னும் பல சொல்லலாம்

 வாழ்வின் அடுத்த நிலை முயற்சிக்கு

 நாம் பெற்ற பரிசுகளாய்!

மனிதத்தை மறக்க பழகுகிறேன்.


மதிப்பெண்களுக்காக வதைக்கப்படும் மாணவர்கள்

…சக்கையாய் பிழியப்படும் சுரங்க பணியாளர்கள்

…தர்மம் அய்யா என அடிவயிற்றில் இருந்து கதறும் பிச்சைக்காரன்

…சாலையில் கிடக்கும் அடிபட்ட மனிதன்

…இறைச்சிக்காக கொல்லப்படும் பசுக்களின் கதறல்

…அந்த மூன்று நாட்களிலும் ஓய்வின்றி உழைக்கும் பெண்கள்

…வேலைக்காரியிடம் குழந்தை - கழிப்பறையிலே தாய்ப்பால் என வேதனையுடன் பணி செய்யும் பெண்கள்

…இந்த ரணங்களில் இருந்து விடுபட
…மற்றவர்களைப் போல் நானும்
…மனிதத்தை மறக்க பழகுகிறேன்.

அந்திப்பொழுது.....


* அந்திப்பொழுது....

* அவள் என்னை சந்தித்த பொழுது

* வசந்தம் வந்து என்னை
  தழுவிய பொழுது