25/09/2012

உன் புராணம் - 2

* புரிந்தது எனக்கு
   காதல் புரியாது என.

* நீ கோவிலை சுற்றினாய்
    நானோ!? உன்னை.

*  உன் கொலுசுகளுக்கு ஏன் இந்த மகிழ்ச்சி?
    உன்னுடனேயே இருப்பதாலோ!!!

* வஞ்சம் வைத்துள்ளேன்
   உன் புத்தகங்கள் மீது
   என்னை பற்ற வேண்டிய கரங்கள்
   அவைகளை பற்றியிருப்பதால்.

* உன்னைப் பற்றி தொடர்ந்து எழுதியதால்
   கவிதைக்கும் உன்மீது காதல்.

* என் கனவில் நீ வருவதன்
   சூட்சமம் என்ன?
   நானும் கடைபிடிக்க வேண்டும்
   அதே சூட்சமத்தை.

* நான் எழுதும் இந்த பேனா இவ்வரிகளை
   உனக்காக dedicate செய்வதாக கொஞ்சுகிறது.

* ரதியிடம் மன்மதனை விலக்கி வைக்கச்
   சொல்லியிருக்கிறேன்! அவன் என்னை
   தனிமையில் தவிக்க விட்டுள்ளதால்...

* இந்திரனை சிறையிட்டு விட்டேன்
   முன்னெச்சரிக்கையாய்...
   இருந்தும் இரவில் நடமாடாதே.
   எனக்கு சோமனைப் பற்றி நன்கு தெரியும்.
   அவன் இன்னும் பாக்கி.

* சக்தி உக்கிரத்தில் இருக்கிறாள்
   சிவன் உன் பின்னால் வந்ததால்.

* கங்கையில் இறங்கி விடாதே,
   அவளுக்கு உன்மேல் தனிக்கோபம்.

திருமகள் திருமாளின் இதயத்தை
   கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறாள், பயத்தில்.

என்னுள் பயம் தீவிரமடைகிறது
   கடவுள்களும் போட்டிக்கு வந்துள்ளதால்...

* இருப்பினும்,
   நான் உனக்காக பிறந்தவன் அல்லவோ!
  போட்டிகள் என்னைத் தளர்த்தி விடுமா என்ன?
    

உன் புராணம்

* உன்னைப் பற்றி தெரியாமல், ரோஜாக்கள் என்னிடம் தான் தான் அழகு என
அடித்து கூறி நம்பவைக்க முயல்கின்றன.

* உலக அழகி நீதான் என கூறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அது உன்னை சிறுமைபடுதிவிடும்.

* உன் கால் தடங்களை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொன்றும் அத்தனை அழகு.

* நேற்று பெய்த மழையில் முளைத்த என்னை உன்னால் இவ்வாறு எழுதவைக்க முடியுமென்றால், கம்பன் ஒருவேளை இப்பொழுது இருந்திருந்தால்....

* நீதான் இவ்வுலகில் என்னை கட்டுப்படுத்தும் பெரிய சக்தி என்று எண்ணியிருந்தேன். ஆனால், உன்னால் என்னை உன்னை நினைக்காமல் இருக்கச் செய்ய முடியவில்லை.

* என்னை நான் முழுதாக உனக்குக் கொடுத்தது தெரியாமல், தன்னில் பாதியை கொடுத்துவிட்டு தான் தான் காதலில் பெரியவன் என ஈசன் இருமாந்துள்ளான்.

* சொக்கி நிற்காதே என்கிறாய் சிரித்துக்கொண்டே, அது எப்படி முடியும் நீ சிரிக்கையில்!?

* காதல் என்ற ஒன்று இல்லை என நீ கூறுவதை நம்புகிறேன், நான் உன்னை காதலிக்கிறேன் என்று தெரிந்திருந்தும்.

* ஆயுள் முழுவதும் நீ சொல்வதை மறுக்காமல் செய்ய ஆசைப்பட்டும், நீ உன்னை மறக்கச் சொன்னதை செய்ய ஏனோ என்னால் முடியவில்லை.


01/09/2012

நிம்மதி

திருமணம் முடிந்து,

பிரிவை  எண்ணி மகள்

வருந்தி அழும்வரை காத்திருந்து

அழுகிறான் தந்தை,

அத் திருமணத்திற்காக

அவன் பட்ட துயரங்களை நினைத்து,

நிம்மதியுடன்....

அன்றுபோல் இன்று இல்லை.

வயல்வெளிகளில் மக்கள்,

அன்று போலவே இன்றும்

நாற்று நாட்டினர்; களை பறித்தனர்;

அறுவடை செய்தனர்; ஆனால்,

அவர்தம் சிரிப்பு மட்டும்

அன்றுபோல் இன்று இல்லை.

ஏன் கூற மறந்தாய் பாரதி?

கட்டுபாடுகள் நிறைந்த

காவிய யுகத்தில்

ரேணுகை, அகலிகையிடம்

எதிர்பார்க்கா கற்ப்பை,

சுதந்திரம் நிறைந்த

அறிவியல் உலகில்

வாழும் புதுமைப்

பெண்ணிடத்தில் எதிர்பார்க்க

எவ்வித முகாந்திரமும் இல்லையென

ஏன் கூற மறந்தாய் பாரதி?

தொங்கிட்டி


தொங்கிட்டி,

அது காதலியின் காதில்

அழகின் அடையாளமாய்

ரசித்ததில் தொடங்கி,

இன்றைய மாடர்ன் யுவதிகளின்

ஃபேஷன் மோகமாகி

அருவருக்கத் தொடங்கியது வரையான

மாபெரும் காவியத்தை

ஒருநொடியில் கூறவல்லது.